Pages

Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Saturday, September 29, 2018

முட்டாள் வேலைக்காரன்

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன்

ஒருநாள் அவனை அழைத்து, "நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ... அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!'' என்றான்.

அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"என்ன இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை வைத்தால் மரம் அதில் சரியாக விழும். வீனாக ஒரு முறை பூமியில் கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே!' என்று நினைத்தான்.

"என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்டி, நான் எத்தகைய அறிவாளி என்பதைப் புரிய வைப்பேன்' என்ற எண்ணத்தில், தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தை தேர்ந்தெடுத்தான்.

கோடாரியால் அந்தப் பனை மரத்தின் அடிப்பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு, அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், "ஏன் இவன் இப்படிப் பைத்தியக்கார வேலை செய்கிறான்!' என்று நினைத்தனர்.

சிறிது நேரத்தில் அந்த மரம், "சடசட'வென்ற சத்தத்துடன் வண்டியின் மீது வேகமாக விழுந்தது. அவ்வளவுதான், வண்டி தூள் தூளானது. கால் உடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக மாடு துடித்துக் கொண்டிருந்தது. இதைக்கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"என் திட்டம் நல்ல திட்டம் தான். வண்டிக்குத்தான் வலிமை இல்லாமல் போய்விட்டது' என்ற முடிவுடன் வீடு திரும்பினான். நடந்ததை அறிந்த வணிகன், முட்டாளாக இருக்கிறாயே! இப்படி செய்யலாமா? என்று வேலைக்காரனைத் திட்டினான்.

சில நாட்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில் மண்ணெண்ணெய் பஞ்சம் வந்துவிட்டது.

"தன்னிடம் இருக்கும் இருபத்தைந்து பீப்பாய் எண்ணெயைப் பதுக்கி வைத்தால் நிறைய லாபம் கிடைக்கும்!' என்று நினைத்தான் வணிகன். உடனே வேலைக்காரனை அழைத்து, ""கடையில் இருக்கும் மண்ணெண்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. யாருக்கும் தெரியக் கூடாது!'' என்றான்.

வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான் வேலைக்காரன். ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதிலுள்ள எண்ணெயைப் பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே எல்லாப் பீப்பாய்களில் உள்ள எண்ணெயையும் ஊற்றி முடித்தான்.

இப்போது அவன் உள்ளத்தில், "இந்தக் காலிப் பீப்பாய்களை என்ன செய்வது? இது குறித்து முதலாளி ஒன்று சொல்லவில்யலையே!' என்ற சிந்தனை எழுந்தது.

"சரி, அவரையே கேட்டு விடுவோம்' என்ற எண்ணத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த வணிகனை எழுப்பினான்.

"ஐயா! நீங்கள் சொன்னபடி மண்ணெண்ணெயைப் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டேன். காலி பீப்பாய்களை என்ன செய்வது என்று கேட்டான். வணிகனுக்குச் சிறிது சிறதாக உண்மை புலப்படத் தொடங்கியது. ஐயோ, "மண்ணெண்ணெய் எல்லாம் பேச்சே!' என்று அலறிய வணிகன், அன்றே அவனை வேலையிலிருந்து நீக்கினான்.".

திருந்திய எழிலன்

எழிலனின் தந்தை கல் உடைக்கும் தொழிலாளி. வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையும் கொடுக்க வேண்டும். உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைத் தன்மகன் படக்கூடாது என்பதற்காக எழிலனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார்.

எழிலன் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். ஏதோ பள்ளிக்குப் போகிறோம் என்ற கடமைக்காக அவன் பள்ளிக்குப் போவானே தவிர, ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறை அவனுக்குச் சிறிது கூட இல்லை.

பள்ளியில் சிறிதுநேரம் இருப்பான். பிறகு, வெளியில் கிளம்பிவிடுவான். சில மாணவர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றியும், அருகில் இருந்த திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்த்தும், வயதான பெரியவர்களைக் கேலியும், கிண்டலும் செய்தும், பொய் பேசியும் வீணாக பொழுதைப் போக்கி வந்தான். மேலும் இது குறித்து அவன் ஒருநாள் கூட கவலைப்பட்டதே இல்லை.

தன் தந்தையிடம் செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வான். அவர், எழிலன் ஒரே மகன் என்பதாலும் படிக்கும் மாணவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எண்ணி அவன் கேட்கும் பொழுதெல்லாம் பணம் கொடுத்து வந்தார்.

எழிலன், தன் தந்தையார் கொடுத்த பணத்தை வாங்கிச் சாப்பிடாமல், தீய நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடினான். மற்றவர்கள் அவன் கெட்டவன் என வெறுத்து ஒதுக்கும்படி அவனுடைய செயல்கள் இருந்தன.

அவனுடைய வகுப்பாசிரியர், அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை என்று கண்டித்தார். பிறகு, அவனுடைய அப்பாவிடம் அவனைக் கண்டித்து வளர்க்குமாறும் சொன்னார். ஆனால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. எழிலனின் தந்தையார் அவனுடைய செயல்களால் பெரிதும் மனம் வருந்தினார்.

ஒருநாள் காவல்துறையினர் 10 பேரை சாலையில் அடித்து உதைத்தபடி, இழுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

இதை பார்த்த எழிலன் கூடியிருந்தவர்களிடம், ''அவர்களை ஏன் காவல் துறையினர் அடிக்கிறார்கள்?'' என்று கேட்டான்.

''அவர்கள் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள்,'' என்று கூறினர்.
பலநாள்கள் அவர்கள் அகப்படவில்லையென்றும், இன்று வகையாக அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் அவர்கள் அவனிடம் மேலும் கூறினர்.

அதைக் கேட்டதும் எழிலனுக்கு உதறல் எடுத்தது. 'மற்றவர்கள் வெறுக்கும் படி நடந்தால் இப்படித்தான் உதைபட வேண்டும். போலிருக்கிறது,' என்று எண்ணி அன்றிலிருந்து திருந்திவிட்டான்.

அன்றிலிருந்து தீய நண்பர்களுடன் சேராமல், தந்தையிடம் பணம் வாங்காமல் பள்ளிக்கு ஒழுங்காக சென்று பாடங்களை நன்றாக படித்து வந்தான். தன் மகன் எழிலன் திருந்தியதைக் கண்ட அவன் தந்தையார் மகிழ்ந்தார்.

எத்தனின் தந்திரம்

ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம்.

ஒரு நாள், வணிகர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட கொமுரு என்ற திருடன், "அவர் வீட்டிற்குச் சென்றால் ஏதாவது சுருட்டலாம்' என்று நினைத்து அங்கே சென்றான்.


வணிகர் பெரும் பணக்காரர். அதனால், அங்கு ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. அங்கு சென்று ஒரு ஓரமாய் உட்கார்ந்த அவன், சற்றுத் தொலைவில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்த எத்தனைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனான்.

இந்த எத்தனும் கூட நம்மைப் போலவே இந்த வீட்டில் திருட வந்துள்ளான் என்பதைப் புரிந்துகொண்ட கொமுரு, அவன் எப்படி இங்கிருப்பவர்களை ஏமாற்றித் திருடப் போகிறான் என்று தான் பார்ப்போமே என்று, கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

வீட்டின் உள்ளே உள்ள ஒரு இருட்டறையில், ஒரு பெரிய கட்டிலின் மீது, வணிகரின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அந்த அறைக்குள், மினுக் மினுக்கென்று ஒரு விளக்கு மட்டும் வெளிச்சம் காட்டிக்கொண்டு இருந்தது. வணிகர் கிடத்தப்பட்டிருந்த கட்டிலுக்குக் கீழே ஒரு பெரிய மரப்பெட்டி கேட்பாரற்றுக் கிடந்தது.

கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்த எத்தன் இப்போது, மெல்ல அந்தக் கட்டிலின் ஓரமாகச் சென்று, தான் கொண்டு வந்த மாலையை, வணிகர் மீது போட்டான்.

பிறகு, தன்னை யாராவது பார்க்கின்றனரா என்று சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். யாரும் பார்க்கவில்லை என்று தெரிந்து கொண்டதும், கட்டிலுக்குக் கீழே உள்ள மரப்பெட்டிக்குள் பொசுக்கென்று புகுந்து கொண்டு விட்டான்.

எத்தனின் இந்தச் செய்கைகளை எல்லாம், சற்று தொலைவில் இருந்தவாறு வைத்த கண் வாங்காமல் கொமுரு பார்த்துக் கொண்டிருந்தான். இறந்து போய்க் கட்டிலில் கிடந்த வணிகர், இப்போது திடீரெனப் பேசத் தொடங்கினார். அங்கிருந்த எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம்.

வணிகரா பேசுகிறார்! வணிகரைப் போல் குரலை மாற்றி, அந்தக் கட்டிலின் கீழே கிடந்த மரப்பெட்டிக்குள் புகுந்திருந்த எத்தனல்லவா இப்படிப் பேசுகிறான். வணிகர் பேசத் தொடங்கியதும், அந்த வீட்டின் அழுகுரல்கள் அனைத்தும் இப்போது ஓய்ந்து போயின.

ஆம்... போன உயிரல்லவா மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. வணிகர், அவர் மனைவியை மட்டும் அருகே வரும்படி கூப்பிட்டார். அவளும், கட்டிலின் ஓரமாய் வந்து நின்றாள்.

""நான் இறந்து போய்விட்டதென்னவோ உண்மை தான். ஆனால், சிறிது நேரம் மட்டும் எமதூதர்கள், என் உயிரைச் சற்று விட்டுப் பிடித்து இருக்கின்றனர். நான், போன மாதம் பக்கத்து ஊரு பங்காரு நாயுடுவிடம், ஐநூறு வெள்ளிப் பணத்தைக் கடனாக வாங்கியிருந்தேன். அதைத் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்!'' என்றார்.

இப்படி வணிகர் கூறியதும், ""ஆமாம்! சாகும்போது கடனோடு சாகக்கூடாது,'' என்றனர் அந்தக் கட்டிலைச் சுற்றி நின்ற கூட்டத்தினர்.

"அது சரி வணிகரே... நீங்க சொன்ன அந்தப் பங்காரு நாயுடுவை, நாங்கள் எப்படி அடையாளம் கண்டு கொள்வது?'' என்று, அங்கிருந்தவர்களில், விஷயம் தெரிந்து ஒருவர் தான் இப்படிக் கேட்டார்.

""இப்போது நண்பகல் ஆகிறதல்லவா... இன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் இங்கே, வெள்ளை வேட்டி, சிவப்புச் சட்டை, நீலத்துண்டு அணிந்து, கையில் வெற்றிலை டப்பாவுடன் ஒருவர் வருவார். நெற்றியில் பெரிய நாமம் கூடப் போட்டிருப்பார். அவர் தான் பங்காரு நாயுடு!'' என்று முடித்தார், கட்டிலில் பிணமாய்க் கிடந்த வணிகர்.

""சரிங்க... அவரிடமே கொடுத்துடறேன்,'' என்று தலையாட்டினாள் வணிகரின் மனைவி.
அதற்குப் பிறகு வணிகருக்குப் பேச்சுமில்லை; மூச்சுமில்லை.

கட்டிலுக்குக் கீழே உள்ள அந்த மரப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு எத்தன் நடத்தும் இந்த நாடகத்தை, சற்று தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கொமுரு, அந்தத் திருக்கடையூர் எத்தனின் சாமர்த்தியத்தை எண்ணி மிகவும் வியந்து போனான்.

கட்டிலுக்குக் கீழே இருக்கும் இந்த எத்தன், இனி யாரும் அறியாதபடி முதலில் வெளியே வந்தாக வேண்டும். பின்னரே, பங்காரு நாயுடு போல வேஷம் போட்டு ஏமாற்ற முடியும். ஏன், நாமே இந்த வேஷத்தைப் போட்டு, இங்கிருப்பவர்களை ஏமாற்றி, இந்த ஐநூறு வெள்ளிப் பணத்தையும் அப்படியே அடித்துக்கொண்டு போகக்கூடாது. இப்படி யோசிக்கலானான் கொமுரு. அவ்வளவுதான்... உடனே புறப்பட்டான் அந்த எண்ணத்தைச் செயலாக்க.

ஒரு துணிக்கடைக்குச் சென்று, வெள்ளைவேட்டி, சிவப்புச்சட்டை, நீலத்துண்டு போன்றவற்றை வாங்கி அணிந்து கொண்டான். நெற்றியில் பெரிய நாமமும், கையில் வெற்றிலை டப்பாவுடனும், வணிகர் வீடு போய்ச் சேர்ந்தான்.
பங்காரு நாயுடுவைப் பார்த்ததுமே, மறுபேச்சின்றி, ஐநூறு வெள்ளிப் பணத்தை அப்படியே மூட்டையாகக் கட்டிக் கொடுத்தாள் வணிகரின் மனைவி.

அதை வாங்கிக்கொண்ட கொமுரு, அங்கிருந்து உடனே புறப்படத் தொடங்கினான் வேக வேகமாக. அவன் புறப்படத் தொடங்கிய அந்தச் சமயத்தில் தான், கட்டிலுக்குக் கீழே ஒளிந்திருந்த எத்தன், மெல்ல வெளியே வந்தான். அப்படி வெளியே வந்தவன், தான் தெரிவித்த அதே பங்காரு நாயுடு மாதிரியான தோற்றத்தோடு கூடிய ஒருவன் இப்போது மெல்ல நழுவிக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனான்.

நம்முடைய திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு விட்ட எவனோ ஒருவன் தான், இப்படி இங்கிருப்பவர்களையெல்லாம் ஏமாற்றிப் பண மூட்டையோடு நழுவிக்கொண்டிருக்கிறான் எனச் சட்டென உணர்ந்தான் எத்தன். அவ்வளவுதான், பண மூட்டையோடு நழுவும் அவனை விரட்டிப் பிடிப்பதென முடிவு செய்தான்.
அடுத்த நொடியே, முடிவு செயலானது.

""ஏய், ஏய்...'' என்று கத்திக்கொண்டு எத்தன், கொமுருவின் பின்னால் ஓடத் தொடங்கினான். இந்தச் சத்தத்தைக் கேட்ட பிறகு தான், சட்டென்று திரும்பிப் பார்த்தான், பண மூட்டையோடு நழுவிக் கொண்டிருந்தான் எத்தன்.

அவ்வளவுதான்! அப்படியே அதிர்ச்சி அடைந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, தலைதெறிக்க ஓடத் தொடங்கினான் கொமுரு. இப்போது, எத்தன் விடுவதாகவும் தெரியவில்லை, எத்தன் நிற்பதாகவும் தெரியவில்லை. இருவரும் ஓடிக்கொண்டே இருந்தனர்.
இப்படி இருவரும் ஓடிக்கொண்டே இருக்கும்போது, ஊருக்கு வெளியே சற்று தூரத்தில், வைக்கோல் போர்கள் இருந்தன. "இந்த வைக்கோல் போருக்குள் நுழைந்துகொண்டு விட்டால், யாராலும் கண்டுபிடிக்க முடியாது' என்று நினைத்த கொமுரு, மறுகணமே, வைக்கோல் போருக்குள் புகுந்து மறைந்துவிட்டான்.

கொமுரு விரட்டியபடி, அந்தக் களத்துமேட்டிற்கு வந்து சேர்ந்த எத்தன், பணமூட்டையை எடுத்து கொண்டு ஓடி வந்தவன், திடீரெனக் காணாமல் போனது பற்றிக் கவலைப்படலானான். எப்படியும், இந்த வைக்கோல் போர்களில் தான் அவன் ஒளிந்திருக்க வேண்டும் என்று, கடைசியில் ஒரு முடிவுக்கும் வந்த எத்தன், அவனை எப்படிக் கண்டுபிடிப்பதென்று யோசிக்கலானான்.

எத்தன் இப்படி யோசித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக, ஆட்டுக் கிடாய்களை ஓட்டிக்கொண்டு ஓர் இடையன் வந்தான்.

அவனிடம், ""ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சலங்கையில், ஐந்து மணிகளை மட்டும் இரவல் தர முடியுமா?'' என்று கேட்டான் எத்தன்.

இடையன் கொடுத்த சலங்கை மணிகளைக் கயிற்றில் கோத்து, தன் கழுத்தில் கட்டிக் கொண்டான் எத்தன். பின், அந்த களத்துமேட்டிலிருந்த ஒவ்வொரு வைக்கோல் போரின் மேலும், மாடு உராய்வது போல உராயத் தொடங்கினான்.

அப்படி அவன் உராயத் தொடங்கியபோது, சலங்கை மணிகள் அவ்வப்போது ஓசையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

இப்படி ஒவ்வொரு போராகச் சென்று எத்தன் உராய்ந்து கொண்டு வரும் போது, கொமுரு ஒளிந்திருந்த அந்த வைக்கோல் போரும் வந்தது. தான் ஒளிந்திருக்கும் அந்த வைக்கோல் போரில் வந்து உராய்வது ஒரு மாடு தான் என்று நினைத்த கொமுரு, ""சே, சே... இந்த சனியன்பிடித்த மாடு, ஏன் தான் இப்படி வந்து உராய்கிறதோ தெரியவில்லையே!'' என்று கூறினான் போருக்குள் இருந்தபடியே.

அவ்வளவுதான்... பண மூட்டையோடு வந்தவன், இந்த போருக்குள் தான் இருக்கிறான் என்று புரிந்துகொண்ட எத்தன், ""எழுந்து வாடா வெளியே!'' என்று அதட்டினான்.

ஒளிந்திருந்த இடம் தெரிந்துவிட்டதால், வேறு வழியின்றி வெளியே வந்தான் கொமுரு. ""அடடே... நீ தானா!'' என்று வியந்தான் கொமுருவைப் பற்றி முன்பே தெரிந்து வைத்திருந்த எத்தன்.

""ஆமாம்... நானேதான்!'' என்றான், அசட்டுத் சிரிப்புடன் கொமுரு.

பிறகென்ன, வணிகரின் ஐநூறு பணமும், ஆளுக்குப் பாதியானது.

***

புத்தியைத் தீட்டு

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்,

மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..

சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி
என்று கேட்டான்!..

நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்!

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,

மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,

மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான்,

ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!

நான் தான் அழகி

ஒரு சிறிய கிராமம் ஒன்றில் தியாகு என்ற தச்சன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சர்மிளா.

தியாகு ஏழையாக இருந்தாலும் சிறந்த உழைப்பாளி. அவன் அவ்வப்போது அருகி லுள்ள காட்டிற்குச் சென்று நன்கு விளைந்த மரங்களை வெட்டி வருவான். அம்மரங் களில் அழகான மேசை, நாற்காலி போன்ற வற்றை உருவாக்கி, அருகிலுள்ள ஊர்களில் விற்று வருவான்.

தியாகு மிக எளிமையான மனிதனாக இருந்தாலும், அவனது மனைவி சர்மிளா அவனுக்கு எதிர்மாறாக இருந்தாள். அவள் வீட்டு வேலைகளைக் கூட சரியாகக் கவனிக்க மாட்டாள். எப்போதும் முகம் பார்க்கும் கண்ணாடி முன்னே அமர்ந்து தன்னை அலங்கரித்துக் கொண்டிருப்பாள். தன்னை எல்லாரும், "அழகி' என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் அவள்.

ஒருநாள் வழக்கம்போல், தியாகு காட்டிற்கு மரம் வெட்டச் சென்றான். அவனது உழைப்பை அறிந்த வனதேவதை அவன் முன்னே தோன்றி, ""மகனே! நீ இத்தனைக் காலம் உழைத்து வருவதை நான் அறிவேன். நான் உனக்கும், உன் மனை விக்கும் மூன்று வரங்கள் தருகிறேன். இவ்வரத்தின் மூலம் நீ உன் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். மூன்று முறை மட்டுமே நீ சொல்வது பலிக்கும்!'' என்று கூறிவிட்டு மறைந்தது.
வரம் பெற்ற தியாகுவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. "அவன் அவ்வரங்களின் மூலம் தன் வாழ்க்கைக்குத் தேவையான வற்றைப் பெற நினைத்தான். இருப்பினும் தன் மனைவியின் ஆலோசனைகளைக் கேட்கலாம்' என்று நினைத்து நேராகத் தன் வீட்டிற்கு ஓடினான்.

வீட்டிற்குச் சென்ற தியாகு, தன் மனைவி சர்மிளாவிடம் தான் வரம் பெற்ற செய்தியை மகிழ்ச்சியுடன் கூறினான். பிறகு என்னென்ன கேட்கலாம் என்று ஆலோசனையும் கேட்டான்.

சர்மிளா அலங்கார விரும்பி அல்லவா? அவள் உடனே, ""முதல் வரமாக நான் இந்த நாட்டிலேயே மிகச்சிறந்த அழகியாக மாறுவதற்கான வரம் கேட்கப் போகிறேன்!'' என்று கூறினாள்.

தியாகுவிற்கு தன் மனைவியின் யோசனை பிடிக்கவில்லை.

""வேண்டாம் சர்மிளா! நாம் நம் வாழ் நாளுக்குத் தேவையான செல்வங்களைக் கேட்கலாம்!'' என்று கூறினான்.

சர்மிளா கணவனின் யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் தன் விருப்பத்திலேயே பிடிவாதமாக இருந்தாள்.

அவள், ""நான் இந்நாட்டின் மிகச்சிறந்த அழகியாக மாற வேண்டும்!'' என்று வேண்டிக் கொண்டாள். மறுநிமிடமே அவள் மிகச்சிறந்த அழகியாக உருமாறினாள்.

சர்மிளாவின் செய்கை தியாகுவிற்கு கோபத்தை வரவழைத்தது.

""சர்மிளா உனக்கு அறிவில்லையா? ஒரு வரத்தை வீணாக்கி விட்டாயே!'' என்று அவளைத் திட்டினான்.

கணவன் தன்னைத் திட்டியதைக் கேட்ட சர்மிளாவிற்கு கோபம் வந்தது.

அவள் தியாகுவிடம், ""இனி நான் இங்கு இருக்க மாட்டேன். நான் என் தாய், தந்தையுடன் சென்று வசிக்கப் போகிறேன்!'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றாள்.

தன் மனைவி தன்னைவிட்டுச் செல்வதைக் கண்ட தியாகுவிற்கு மனதில் வருத்தம் தோன்றியது. அவன் தன் மனைவியை சமாதானம் செய்ய அவள் பின்னாலேயே சென்றான். ஆனால், அவளோ கணவின் பேச்சைக் கேட்காமல் தாய் வீடு இருக்கும் அடுத்த ஊரை நோக்கி நடைபோட்டாள்.

அவ்வேளையில் அந்நாட்டு அரசன் தன் பரிவாரங்களுடன் யானை மீது அவ் வழியே வந்து கொண்டிருந்தார். அரசர் அவ்வழியே சென்ற சர்மிளாவைக் கண்டார். அந்நாட்டில் அவளைப் போல ஒரு அழகியைக் கண்டதே இல்லை.
எனவே அரசருக்கு சர்மிளாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அவர் தன் படைவீரர் களை அழைத்து, சர்மிளாவை இழுத்து வரும்படி உத்தரவிட்டார்.

படைவீரர்களும் சர்மிளாவை நோக்கி விரைந்தனர். அவர்கள் சர்மிளாவின் கைகளைப் பிடித்து அரசரிடம் இழுத்துச் சென்றனர்.

சர்மிளாவிற்கோ அழுகை வந்தது.

"கணவனிடம் கோபித்து இவ்வாறு படை வீரர்களிடம் மாட்டிக் கொண்டோமே' என்று எண்ணி வருந்தினாள். படைவீரர்களிடம் தன்னை விட்டுவிடுமாறு கதறினாள். ஆனால், அவர்கள் அதற்கு சிறிதும் செவிசாய்க்க வில்லை.

நடந்தவை அனைத்தையும் தியாகு பார்த்துக் கொண்டுதான் இருந்தான். தன் மனைவியை படைவீரர்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட தியாகுவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

திடீரென்று அவனது மனதில் வன தேவதையின் வரம் நினைவிற்கு வந்தது. படைவீரர்களிடமிருந்து தன் மனைவியை விடுவிக்க ஒரே வழி இதுதான் என்று அவன் நினைத்தான்.

""இப்போது என் மனைவி ஒரு குரங்காக மாற வேண்டும்!'' என்று வனதேவதையை மனதில் நினைத்து வேண்டினான் தியாகு.

மறுநிமிடமே அவள் ஒரு குரங்காக மாறி விட்டாள். வனதேவதை தந்த இரண்டாவது வரமும் வீணாகிவிட்டது.

படைவீரர்கள் குரங்குடன் அரசரை நெருங்கினர். படைவீரர்கள் ஒரு குரங்கை இழுத்து வருவதைக் கண்ட அரசருக்குக் கடுமையான கோபம் வந்தது.

அவர், ""நான் அழகியை இழுத்து வரச் சொன்னேன். நீங்கள் ஒரு குரங்கை பிடித்து வந்திருக்கிறீர்களா?'' என்று கோபத்தோடு கேட்டார். அப்போதுதான் படைவீரர்கள் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் கையில் அகப்பட்டிருந்தது குரங்கு என்பது அவர் களுக்கும் தெரிந்தது.

குரங்கைக் கண்ட அதிர்ச்சியில் அவர்கள் கைகளை விடுவித்தனர். இதுதான் தக்க சமயம் என்று எண்ணிய குரங்கு அருகி லிருந்த காட்டுக்குள் ஓடித் தப்பியது.

தான் கண்ட அழகி எப்படியோ தப்பித்து விட்டாள் என்பதை அறிந்த அரசரும், தன் பரிவாரங்களுடன் வந்த வழியே சென்றார்.

தியாகுவிற்கோ இப்போது வேறு கவலை முளைத்தது. குரங்காய் மாறி காட்டுக்குள் ஓடிய தன் மனைவியை மீட்க வேண்டும் என்பதே அந்தக் கவலை!

அவன் மீண்டும் வனதேவதையை மனதில் நினைத்து, ""குரங்காய் மாறிய என் மனைவி மீண்டும் பெண் உருவில் என்னிடம் வந்து சேர வேண்டும்!'' என்று வேண்டிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் காட்டிற்குள்ளிருந்து தியாகுவின் மனைவி சர்மிளா நடந்து வந்தாள். மீண்டும் தன் மனைவியைக் கண்ட தியாகு வின் மனதில் நிம்மதி தோன்றியது. ஆனால், வனதேவதை தந்த மூன்று வரங்களும் வீணாகிவிட்ட வருத்தமும், அவனுக்குள் எழவே செய்தது.

தியாகுவிடம் வந்து சேர்ந்த சர்மிளா, ""என்னை மன்னித்து விடுங்கள்! நீங்கள் சொன்னதுபோல வன தேவதை அளித்த மூன்று வரங்களையும் நம் வாழ்க்கைக்குத் தேவையான வற்றைப் பெறுவதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

""அதற்கு மாறாக, நான் உங்கள் யோசனையைக் கேட்காமல் அழகியாக வேண்டும் என்ற பிடிவாதத் தில் மூன்று வரங்களையும் வீணாக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்! இனி கண்ணாடி முன்னே அமர்ந்து எப்போதும் அலங்காரம் செய்து கொண்டிருக்க மாட்டேன். என் உருவத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன். உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்!'' என்று உறுதி கூறினாள்.

தியாகுவும், தன் மனைவி திருந்தியதை அறிந்து மகிழ்ச்சியுற்றான். அவன் தன் மனைவியோடு தன் குடிசைக்குத் திரும்பிச் சென்றான்.

சீறும் பாம்பு

சீறும் பாம்பு

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.


பலவீனமே பலம்

பலவீனமே பலம்


சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.
தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.
ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். “இந்த ஒரு குத்து போதும் உனக்கு” என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் … நீங்கள் நினைத்தது சரிதான். வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சர்யம். சிறுவனுக்கும்.
”எப்படி குருவே என்னால் ஒருகையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது?” என்று கேட்டான்.
குரு சொன்னார்: “ இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை”
குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.

சோதனையை வெல்


சோதனையை வெல்

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். 


கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். 


ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. 


தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது. 


தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். 


மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம். 


Quiz 6

Quiz Quiz in Maths All the best for your test